ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தாநல்லூரில் விவசாயிகள் வெண்ணாற்றின் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதற்கு டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வெண்ணாற்றில் உள்ள கழிவு நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மத்திய மாநில அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து போராட்டத்தில் இருந்த விவசாயிகள் கூறுகையில்," இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பி தான் உள்ளார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்த பகுதியில் செயல்படுத்தினால் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் நிலை உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும். நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மண்ணை பாலைவனமாக்கி, மக்களை அகதியாக்க துடிப்பதை நிறுத்தவேண்டும். எங்களுக்கு, நிலமும், அதில் விளையும் நெல்லும், எங்களுக்கு குழந்தைதான், அந்த குழந்தையை காக்க, வீட்டிற்கு ஒருவரை இழக்கவும் தயங்கமாட்டோம், "என்றனர்.