கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை முழக்குதுறையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் சிதம்பரம் பகுதியை சுற்றியுள்ள சுவாமி சிலைகள் மற்றும் வைணவ தளங்களில் முக்கியமானதாக விளங்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலிருந்து பூவராகவசுவாமி உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி நடப்பதும் வழக்கம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து சாமிகளை வழிபடுவார்கள்.
அதேபோல் இந்த ஆண்டு மாசிமக தீர்த்தவாரிக்காக பூவராகவசாமி கிள்ளை முழக்குதுறைக்கு திங்கள் கிழமை வந்தது. இதனை கிள்ளை தர்கா டிரஸ்டி சார்பில் அதன் தலைவர் சையத் சக்காப் மற்றும் டிரஸ்டி உறுப்பினர்கள், இஸ்லாமியர்கள் மேளதாளம் முழங்க, பட்டு, பச்சரிசி, தேங்காய், பழம், ரூ.501 சீர் கொடுத்து வரவேற்று பூஜை செய்தனர்.
இதனை தொடர்ந்து பூவராகசாமி கொண்டு வந்த நாட்டுசக்கரை, மாலை உள்ளிட்ட சீர்வரிசையை இஸ்லாமியர்கள் மற்றும் சாமியுடன் வந்தவர்கள் ஒன்றாக சென்று கிள்ளை தர்காவில் வைத்து பாத்தியா ஓதினார்கள். வைணவ கடவுளான பூவராகவசுவாமியை இஸ்லாமியர்கள் வரவேற்று பூஜை செய்து, சுவாமி கொண்டுவந்த சீரை, கோவில் பட்டாட்ச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மேளதாள முழங்க தர்காவிற்கு எடுத்து சென்று பூஜைசெய்து சீராக கொண்டு வந்த நாட்டு சர்க்கரையை அனைவருக்கும் வழங்கினர்.
இது மதநல்லிணக்கதிற்கான சிறந்த எடுத்து காட்டாக இருந்தது. இந்த நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள், கோவில் பட்டாட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து கிள்ளை தர்கா டிரஸ்டியின் தலைவர் சையத் சக்காப் கூறுகையில், "இந்து, இஸ்லாமியர்கள் ஒற்றுமையை போற்றும் வகையிலும், நாடு செழிக்க வேண்டும், மக்கள் சுபிச்சமுடன் வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து பூவராகசுவாமிக்கு இந்த வரவேற்பு நடக்கிறது. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல தொடர்ந்து நடந்து வருகிறது. தர்கா டிஸ்டி சார்பில் தரப்படும் பட்டு, பச்சரிசி, தேங்காய், பழம் ஆகிய சீர் பொருள்கள் பூவராகவ சுவாமிக்கு பூஜை செய்யப்படும். அது போல பூவராகவசாமி கொண்டு வந்த நாட்டுசக்கரை, மாலை உள்ளிட்ட சீரை பொருளை கிள்ளையில் உள்ள தர்காவில் வைத்து பாத்தியா ஓதி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மத ஒற்றுமையை பறைசாற்றுகின்ற வகையில் இது நடைபெற்று வருகிறது" என்றார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் அறநிலையதுறை அலுவலர் மஞ்சு, ஸ்ரீமுஷ்ணம் கோயில் அலுவலர் நரசிங்கபெருமாள் உள்ளிட்ட இந்து இஸ்லாமிய மக்கள் ஏராளமாக கலந்துகொண்டனர்.
இந்து, இஸ்லாமியர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி கலவரம் செய்து வரும் சூழலில் இதுபோன்ற மதம் கடந்து மகத்துவத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சியை பார்க்கும் பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.