அரசு உத்தரவின்படி, கடந்த மார்ச் 25 முதல் வரும் மே 3 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு தினசரி 80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மூடப்பட்டுள்ள 40 நாட்களுக்கும் சேர்த்து 3200 கோடி ரூபாய் மொத்த வருவாய் இழப்பு என்கிறது புள்ளிவிபரம். ஆனால், குடிமகன்கள் முன்பு போதையில் தள்ளாடியவர்கள் இப்போது மது கிடைக்காமல் தள்ளாடுகிறார்கள். இவர்களின் தள்ளாட்டத்தை நிறுத்துவதற்காக டாஸ்மாக் கடை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என பலரும் ஆங்காங்கே மதுபாட்டில்களை திருடி விற்பனை செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அடுத்து தமிழகமெங்கும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது படுவேகம் எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் மதுபாட்டில் திருடி விற்றவர்கள் என 99 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுவிலக்கு காவல்துறை, தலைமறைவான 112 பேரை தேடியும் வருகிறது. ஏற்கனவே மதுவிலக்கு போலீஸ் தமிழகத்தை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி என ஐந்து மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கள்ளச் சாராயத்தையும், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பதையும், கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்.ஐ சக்தி கணேஷ், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்தனர். வேப்பூரை அடுத்துள்ள, சேப்பாக்கம் நான்கு வழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்தனர். அவர் நிற்காமல் செல்லவே அவரது பைக்கை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பைக்கில் லாரி டியூப்பில் வைத்திருந்த 120 லிட்டர் சாராயத்தை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் அருகில் உள்ள நகர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் அன்பழகன் என்பதும், இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. அதேபோல் வேப்பூர் அருகில் உள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், இவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக பதவியில் உள்ளார். இவர் வாட்டர் பாட்டிலில் கள்ளச்சாராயத்தை அடைத்து விற்பனை செய்துள்ளார். இவரை கையும், களவுமாக பூலாம்பாடி ஏரிக்கரையில் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேற்படி இருவரும் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 135 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேற்படி கள்ளச்சாராயம் கல்வராயன் மலையில் உற்பத்தி செய்யப்பட்டு டூவீலர்களில், இரவு நேரங்களில் சேலம் கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பரபரப்பாக சப்ளை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கள்ள சாராயக்கடைகள் கிராமங்களில் துவக்கப்பட்டு வருகிறது. போலீசார் கரோனா நோய் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க படாதபாடுபடுகிறார்கள். இதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.