ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், புவனகிரி எம்.எல்.ஏ துரை, கி.சரவணன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சீட்டுகளைப் பிரித்து கட்டு கட்டி, வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் போது தவறுகள் நடைபெறும் என வேட்பாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டு கட்டும் இடத்திலேயே வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களை சி.சி.டி.வி கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் நிறைவடையும் வரை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், அந்தந்த முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிற வேட்பாளர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தி.மு.க கூட்டணி கட்சியினர் சென்றனர். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்வதற்கான அடையாள அட்டைகள் பெறவும், விண்ணப்ப மனு அளிக்கவும், பலர் அங்கு சென்றனர். ஆனால் நீண்ட நேரம் ஆன பிறகும் தேர்தல் அலுவலர் குமார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவில்லை.

இதனால் அவர்கள் மனு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்றிய செயலாளர் தங்க. ஆனந்தன் தலைமையில் கடைவீதியில் திரண்டு 'தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்' என்று ஒரு அட்டையில் எழுதி அதனை ஒரு எருமை மாட்டின் மேல் ஒட்டினர். பின்னர் அந்த எருமையிடம் மனுவை அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.