
விஞ்ஞான வளர்ச்சியினால் தொழில் நுட்பங்கள் விரிவடைந்த நிலைவில் அதற்கேற்ப குற்றச் சம்பவங்களும் வினோதப் பாதையில் பயணிப்பது அதிர்ச்சியாகவும், புலன் விசாரணைக்குச் சவாலாய் உருவெடுத்திருப்பதும் காவல்துறை மட்டத்தில் பரபரப்பான விவாதப் பொருளாகிவிட்டது. அதற்கேற்ப நடந்த சம்பவங்களும் அவர்களின் விவாதத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையிலிருந்து சுரண்டை செல்லும் சாலையின், இலத்தூர் எனப்படும் ஈனா விலக்குப் பகுதி அருகே உள்ளது மதினாப்பேரிகுளம் எனும் பகுதி. அடர் முட்செடிப் பகுதியான அது ரிமோட் ஏரியா என்பதால், அங்கு ஆட்களின் நடமாட்டமிருக்காது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11 அன்று காலையில் உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடந்திருப்பதை பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள், உடனடியாக இலத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மாவட்ட எஸ்.பி.யான அரவிந்திற்கும் தகவல் போக, அவரோடு இலத்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். சம்பவ இடத்தை போலீசார் ஆராய்ந்ததில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் முழுவதும் 90% எரிந்த நிலையில், இடது கை மட்டும் எரியாமலிருக்க, அந்த பெண் காலில் மெட்டி அணிந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, சம்பவ இடத்தில் கிடந்த மது பாட்டில்களை சேகரித்த தடயவியல் அலுவலரான ஆனந்தியின் குழுவினர், தடயங்களை சேகரிக்கத் தொடங்கினர்.
உடல் கிடந்த இடத்தினருகே அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிற சிமெண்ட் லோடுகளின் பரிமாற்றக் குடோனிருப்பதையும், அந்த லாரிகளின் டிரைவர்கள் லோடு ஷிப்ட்டிங் தொழிலாளர்கள் ஆகியோர் அங்கு தங்கியிருந்து செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளனர் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். அவர்களில் யாருக்கேனும் இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கலாமோ, அந்தப் பெண்ணிடம் காணப்பட்ட மெட்டியால் அவள் மணமானவள், முறை தவறிய பெண் விவகாரம் காரணமாக அருகிலுள்ள உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? என்றெல்லாம் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணை சவாலாக இருந்ததால், எஸ்.பி அரவிந்த் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து செயல்பட்டு வந்தார்.
அந்த தனிப்படையினர், கேரளா, உள்ளூர் பகுதி என்று பல பகுதிகளை அலசினர். இதுதவிர வெளியூர் பெண்களை இங்கு கொண்டு வந்து கொலை செய்து எரித்திருக்கலாம் என்றும் உடலோ 90% எரிக்கப்பட அதை எரிப்பதற்கு விறகுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் போலீசார் சந்தேகித்தனர். உடல் எரிந்து கிடந்த இடத்தில் அதற்கு அடையாளமாக கட்டைகள் மற்றும் சாம்பல்கள் இல்லாததால் சந்தேகம் இன்னும் வலுத்தது. ஆனால், உடல் எரிந்த இடத்தில் நான்கடி சுற்றளவிற்கு மட்டுமே தீ பரவியிருப்பதால், உடலை எரிப்பதற்கு பெட்ரோல் தவிர்த்த வேதிப் பொருட்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த தடவியியல் துறைக்கு, அந்த வேதிப்பொருள் எந்த வகை என்று கண்டுபிடிப்பது சவாலாக இருந்ததாக தடவியியல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில், அயராமல் செயல்பட்ட எஸ்.பி.யின் எஸ்.ஐ.டி, சம்பவ பகுதியான இலத்தூர் முதல் ஈனா விலக்கு வரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தன. அதில், எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில் மர்ம கார் ஒன்று அப்பகுதியை ஒட்டிச் சென்றதற்கான சி.சி.டி.வி. கேமராப் பதிவு தெரியவந்துள்ளது. அதனைக் கைப்பற்றிய எஸ்.ஐ.டி. அதன் மூலம் விசாரணையைத் தீவிரப்படுத்தின. அந்தக் காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி.யினர் அந்தக் காரின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்தவர் என்று தெரியவர அவரிடம் விசாரணை நடத்தினர். அந்தக் காரை அவரது நண்பரான சிவகாசியைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ பிரேம்ராஜ் என்பவர் பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து ஜான்பிரிட்டோவைப் பிடித்து எஸ்.ஐ.டி. விசாரிக்க, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்து சுதாரித்த எஸ்.ஐ.டி.யினர், தங்களின் வழக்கமான கோணத்தில் விசாரிக்கவே கொலையான இளம்பெண் ஜான்பிரிட்டோவின் காதல் மனைவி கமலி என்பதும் குடும்பத்தகராறில் அவரை கொலை செய்து எரித்ததும் தெரியவந்திருக்கிறது.

அடுத்து அவர்களின் விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் ஆலங்குளம் பகுதியின் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ பிரேம்ராஜ். இவரும் கொலையான கமலியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தவர்கள். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின்பு காதல் தம்பதியரின் வாழ்க்கை சீராக சென்றுள்ளது. இந்த நிலையில், கமலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் தன் மனைவி கமலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஜான்பிரிட்டோ, எதேட்சையாக, தன் மனைவி அந்த நபருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், தகராறு மூண்டிருக்கிறது. இதனிடையே பிப்-10ம் தேதியன்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த ஜான்பிரிட்டோ கமலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். மனைவி உடலைப் போலீசுக்குத் தெரியாமல், உருத்தெரியாதபடி எரித்துவிட்டால் இதில் தப்பித்துவிடலாம் என்று ஜான்பிரிட்டோ திட்டமிட்டுள்ளார். உள்ளூரில் எரித்தால் உடனே தெரிந்துவிடும் என்பதால் தென்காசி குற்றாலம் பகுதிக்குச் சென்று எரித்துவிட முடிவு செய்த ஜான்பிரிட்டோ, சிவகாசியைச் சேர்ந்த தனது நண்பரிடம் காரை இரவல் வாங்கியுள்ளார். அந்த காரில் கமலியின் உடலை யாருக்கும் தெரியாமல் டிக்கியில் மறைத்து வைத்திருக்கிறார்.
துணைக்கு ஒருவர் வேண்டுமென்பதற்காக தனது உறவினரான சிவகாசியிலிருக்கும் தங்க திருப்பதியையும், காரில் குற்றாலம் போய் குளிக்கலாம் என்று நாசூக்காகக் கூறி அவரையும் காரில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து 90 கி.மீ. தொலைவிலிருக்கிற குற்றாலம் வந்திருக்கிறார். இதற்கிடையே கமலியின் உடலை எரிப்பதற்காக சிவகாசியில் சகஜமாகக் கிடைக்கிற பெட்ரோலியப் பொருளும், பெயிண்ட்களில் கலக்கப் பயன்படுகிற பவர்ஃபுல் தின்னர் எனும் வேதிப் பொருளையும் உடன் மறைத்து எடுத்துக் கொண்டு ஜான்பிரிட்டோ வந்திருக்கிறார். குற்றாலம் வந்த ஜான்பிரிட்டோ, உறவினரோடு ஆனந்தக் குளியல் போட்டிருக்கிறார். பின்னர் திரும்பிய அவர், மனைவியின் உடலை எரிப்பதற்காக, தோதான இடத்தை தேடிய ஜான்பிரிட்டோ, ஆட்கள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியான மதினாப்பேரிகுளம் பகுதியைத் தேர்வு செய்துள்ளார். அந்த இரவில் காரை அங்கு நிறுத்தி, உடன் தங்கதிருப்பதியை அழைத்துக் கொண்டு காரின் டிக்கியைத் திறந்திருக்கிறார். அப்போது, கமலி கொலை செய்யப்பட்டு சடலமாக வைக்கப்பட்டிருப்பதை கண்டு தங்க திருப்பதி அதிர்ச்சியடைந்துள்ளார். தங்க திருப்பதியை சமாளித்த ஜான்பிரிட்டோ, கமலி உடலை அருகிலுள்ள முட்புதருக்கு எடுத்துச் சென்று தான் கொண்டு வந்திருந்த வேதியலான தின்னரை உடல் முழுக்க ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். தின்னரின் வேகம், பற்றிய நெருப்பு கமலியின் முகம் உடலை முழுவதுவமாக அடையாளம் ரெியாமல் எரித்துச் சிதைத்திருக்கிறது. உடல் முழுமையாக எரிப்பட்டதை உறுதிப்படுத்திய பிறகே அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். ஜான்பிரிட்டோ தான் கொலையிலிருந்து தப்பிக்க, அதற்கான துளி ஆதாரமும் கிடைத்து விடக்கூடாது என்ற பக்கா கிரிமினல் பிளான் இது என்பது தெரிய வந்திருக்கிறது என்றார் அந்த விசாரணை அதிகாரி. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யான அரவிந்திடம் பேசியதில், ‘அவர்களுக்குள்ளான குடும்பத் தகராறு தான் காரணம்’ என்றார்.

இந்த உடல் எரிப்புக் கொடூரத்தின் நெருப்பு கூட அணையவில்லை அடுத்த நான்காம் நாள், மாவட்டத்தின் அடுத்த பகுதியான கடையநல்லூர் அருகே நடத்தப்பட்ட உடல் எரிப்பு பயங்கரம் ஏரியாவை உறையவைத்து விட்டது. கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமை அடுத்த தனியார் தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்திருக்கிறது. எஸ்.பி. அரவிந்த்ம் காவல் சரக இன்ஸ்பெக்டர் ஆடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர். தடயங்களை அத்துறையின் அலுவலர் ஆனந்தியும் சேகரிக்க, கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்திருக்கிலாம் என்ற கோணத்தில் புலனாய்வு பயணித்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் ஆடிவேல், தலைமையிலான போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டவர் அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிவராஜ் என்பதும், அந்தப் பகுதியின் கோழிப்பணையில் வேலை பார்த்து வந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. சிவராஜுக்கும், அவரது மகன் கவுரிராஜீக்கும் குடும்பச் சண்டை தொடர்ந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட சிவராஜின் முதல் மனைவி அல்லிராணி, கணவரைப் பிரிந்து இலங்கையில் வசிப்பவர். தற்போது சிவராஜ் இங்கே தனது இரண்டாவது மனைவியான மாரியம்மாளுடன் வசித்து வந்திருக்கிறார். திருமணமான கவுரிராஜூக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். தந்தைக்கும் மகனுக்குமான குடும்பப் பிரச்சினை பெரியதாக வெடித்திருக்கிறது. இதில் கிரிமினல் மூளையோடு செயல்பட்ட மகன் கவுரிராஜ், கோழிப்பண்ணை உரிமையாளர் அழைப்பதாகக் கூறி தந்தை சிவராஜை தனது பைக்கில் அழைத்துப் போயிருக்கிறார்.

தென்னந்தோப்பிற்கு வந்த இவர்கள் இருவரும் மது அருந்திய போது அவர்களுக்குள் வாக்குவாதம் வெடிக்க ஆவேசமான மகன் கவுரிராஜ், மது பாட்டிலால் தந்தை சிவராஜை குத்திக் கொலை செய்து விட்டுக் கிளம்பியிருக்கிறார். மறு நாள் தோப்பிற்கு வந்த மகன் கவுரிராஜ், உடலை அடையாளம் தெரியாமல் சாம்பலாக்குவதற்காக அவர் மீது தென்னை மட்டை, ஒலைகளைப் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். போலீசாரின் விசாரணையில் இந்த விஷயங்கள் வெளியே வர, கவுரிராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றப் புலனாய்வுக்கே கடுமையான சாவல்விடுகிற இந்த அசாதாரணமான கிரிமினல்கள் ஆபத்தானவர்கள் என்று கூறப்படுகிறது.