ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் (17230) ரயில், சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (டிச. 13) காலை 6.30 மணிக்கு வந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பிறகு, ஐந்து நிமிட இடைவேளையில் ஈரோடு நோக்கி புறப்பட்டுச் சென்றது.
சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே சென்றபோது, தண்டவாளத்தில் அதிகளவில் அதிர்வு ஏற்பட்டது. அதையறிந்த, ரயில்வே கீமேன் ரயிலை நிறுத்துவதற்காக திடீரென்று சிவப்பு கொடியை அசைத்தார். அதைப்பார்த்த லோகோ பைலட் (ரயில் இன்ஜின் ஓட்டுநர்), ரயிலை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கிப் பார்த்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ரயில் இன்ஜின் ஓட்டுநர், நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதே போல் சேலம் ரயில்வே கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடம் விரைந்த அதிகாரிகள், விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில், கிளிப் மூலம் தண்டவாளத்தை இணைத்து சரி செய்தனர். காலை 7.30 மணியளவில், விரிசல் சரி செய்யப்பட்டது. அதையடுத்து சபரி எக்ஸ்பிரஸ் ரயில் அந்தப் பாதையில் தொடர்ந்து சென்றது. இச்சம்பவத்தால், சபரி எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''அதிக அழுத்தம், அதிர்வு காரணமாக தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுவது சகஜமானதுதான். வழக்கமாக தண்டவாளங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டுள்ள பகுதியில்தான் விரிசல் ஏற்படும். ஆனால், இந்த பாதையில் வித்தியாசமாக விரிசல் ஏற்பட்டு இருந்தது. கீமேன் முன்கூட்டியே இப்பிரச்னையை அறிந்ததால், விபத்து நிகழ்வது தடுக்கப்பட்டது,'' என்றனர்.