நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல்விசாரணை நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கப்படும் கனகராஜ், மர்மமான முறையில் பலியானார். தற்போது, அது தொடர்பாக கனகராஜின் சகோதரர்கள் தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர்மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் என 201, 211, 404 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, தனிப்படை போலீசார் சேலத்தில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் கூடலூர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன், உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் (27.10.2021) மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சய் பாபா, கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.