தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவினரும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் தொடர்ந்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில், பாஜக முக்கிய நிர்வாகியான எச்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நமிதா பேசுகையில்,
''எல்லாருக்கும் வணக்கம்... சௌக்கியமா...'' எனக் கேட்க பதில் வராததால் ''எதுவுமே கேட்கல''என்று உரையைத் தொடங்கினார்.
''மோடிஜியின் முத்ரா திட்டம் உங்களுக்கு கொண்டி வந்தி மூலம் நிறைய பேய்களுக்கு உதவி செய்தார்'' என்று கூறிய நமீதா, தொடர்ந்து பேசுகையில், ''தாமரைக்கு ஓட் போடுவதால் மாசத்துக்கு குடும்பத்துக்கு தலைவிக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுக்க போறேன் அதுகூட இலவசமா... மற்றும் வருசத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்ஸ் கொடுக்கப் போறேன் அதுகூட இலவசமா... இடம் இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீட்டும் கட்டிக்கொடுக்கு போறேன் அதுவும் இலவசமா... உங்களுக்கு ஃப்ரீயா வாஷிங்மெஷின் கொடுக்கப் போறேன்'' எனத் தமிழைக் கொலை செய்தார்.