நீதித்துறை நடுவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில், நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது நீதித்துறை நடுவர் மன்ற அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, நீதிமன்றம் வழக்கம்போல் காலையில் கூடியது. நீதித்துறை நடுவர் பொன் பாண்டி தனது அலுவலக அறையில் இருந்து திடீரென்று கூச்சல் போட்டபடியே வெளியே ஓடி வந்தார்.
அப்போது அவர், அலுவலக உதவியாளர் பிரகாஷ் தன்னை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாகக் கூறினார். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் பிரகாஷை மடக்கிப் பிடித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரித்தனர். மேட்டூர் நீதிமன்றத்தில் இருந்து ஓமலூர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிரகாஷை, அங்கு பணியில் சேர்ந்த சில நாள்களில் சேலம் நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன அழுத்தம் காரணமாக, சேலம் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த நாளன்றே, அவர் நீதித்துறை நடுவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. கொலை முயற்சியின்போது லேசான காயம் அடைந்த நீதித்துறை நடுவர் பொன் பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்பினார்.
இந்த வழக்கு விசாரணை, சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த பிரகாஷ்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.