கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த குடுமியாங்குப்பம் கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடையை கட்ட முற்பட்ட போது அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனு அளித்தனர்.
ஆனாலும் ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை திறக்கப்பட்டது. அதனால் குடுமியாங்குப்பம் மட்டுமின்றி பல்வேறு கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அந்த மதுக்கடையை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் மது அருந்துபவர்கள் போதையில் அவ்வழியை கடக்கும் பெண்களை கிண்டல், கேலி செய்ததால் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் அந்த மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணிவிகள் பண்ருட்டி - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்ளுக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. அதன்பின்னரும் மக்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பண்ருட்டி - சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.