கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தமிழகத்தில் எடுக்கப்படும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார். முதல்வர் - ஆளுநர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம், மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே சென்று இரண்டு மாத வாடகையை காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறார் என்றார்.
பின்னர் தேவையான அளவுக்கு முகக்கவசம் மற்றும் வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளன. கரோனா அறிகுறி தென்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. தென்கொரியாவைப் போன்று அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படவில்லை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஒத்துழைக்காவிட்டால், வீட்டில் இருந்து வெளியேற்றி அரசின் முகாமில் அடைக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் மக்கள் வெளியில் கூடுவதை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். கரோனா தீவிரத்தை உணர்ந்து மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.