திருவண்ணாமலை மாவட்டம் என்பது கிராமங்கள் நிறைந்த மாவட்டமாகும். 980 கிராம ஊராட்சிகள் உள்ளன. 70 சதவித மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். படிப்பறிவு குறைந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கிராமங்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் சுகாதார வசதிகள் மிகக் குறைவாகவே இம்மக்களுக்குக் கிடைக்கின்றன.
இதனால், மருத்துவம் பார்க்கிறோம் என்கிற பெயரில் போலி மருத்துவர்கள் அதிகளவில் இந்த மாவட்டத்தில் உள்ளனர். மருத்துவம் படிக்காத இந்த மருத்துவர்கள், கிராமங்களுக்கு நேரடியாகச் சென்றும், சில இடங்களில் கிளினிக் திறந்தும் வைத்தியம் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட மருத்துவம் பயிலாத மருத்துவர்கள் செங்கம், மேல்செங்கம், ஜம்னாமத்தூர், தண்டராம்பட்டு, சாத்தனூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிகம். செங்கம் பகுதியில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலருக்குப் புகார்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செங்கம் அரசு பொது மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் அருளானந்தம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செங்கம் பேரூராட்சியில் நடத்திய சோதனையில், செங்கம் ராஜவீதியில் உள்ள பாலா கிளினிக்கில் ஆய்வு நடத்தினர். அந்த கிளினிக்கை நடத்திவரும் பாலமுருகன் என்பவர், 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்துவருவது தெரியவந்தது. அந்த கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகளைக் கைப்பற்றி அவரை செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர் கரோனா அறிகுறியுடன் வந்தவர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இவரைப்பற்றி, செங்கம் நகர காவல்நிலையத்தில் புகார் தர, அதன் அடிப்படையில் போலி மருத்துவர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.