நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இடுதட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடிந்து மலையடிவாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து நண்பருடன் தங்கினார்.
இரவு நேரத்தில் இருவரும் மது வாங்கி வந்து விடுதி அறையில் அருந்தினர். மது அருந்தும்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ''உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு செய்யாதே. உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை அருமையாக வைத்திருப்பேன்'' என பாரதி கூறியுள்ளார்.
அதைப்பற்றி பேச வேண்டாம். வேறு எதாவது பேசலாம் என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார். இருப்பினும் பாரதி மீண்டும், ராமச்சந்திரன் அவரது மனைவியுடன் தகராறு செய்ததை பற்றி பேசியுள்ளார்.
இதனால் ராமச்சந்திரன் ஆத்திரம் அடைந்தார். என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என கேட்டு தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் பாரதி அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாரதி, உறவினர்களுக்கு போன் செய்து ராமச்சந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினார். ராமச்சந்திரனின் சகோதரர் வாசுதேவன் இந்த சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் பாரதி, ராமச்சந்திரனின் உறவினர்களை சமாதானம் செய்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான வேலைகளை செய்தார்.
சாவில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி வந்த வாசுதேவன், ராமச்சந்திரனின் சாவில் மர்மம் இருப்பதாக பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து கோவை அரசு மருத்துவர்களால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
பாரதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த பாரதி, பின்னர் ராமச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டர். இதனையடுத்து போலீசார் கொலை வழக்குபதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.