நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குறிப்பிடும்படியானது பாளையங்கோட்டையிலுள்ள மத்திய சிறைச்சாலை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலம் தொட்டுத் தொடரும் புராதான ஜெயில், பாளை மத்திய சிறைச்சாலை. மூன்று மாவட்டங்களின் 1800 கைதிகளையும், ஒரு கண்காணிப்பாளர் தலைமையில் 550 காவலர்கள் சுழற்சி முறைப் பணியிலிருக்கின்றனர் பாளை சிறைச்சாலையில்.
பாளை சிறையிலிருந்து வருடம் தோறும் தண்டனை கைதிகள் சிலரை சென்னை புழல் சிறைக்கு கம்ப்யூட்டர், பேக்கரி, டெய்லரிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பயிற்சியின் பொருட்டு அழைத்துச் செல்வர். அங்கு ஒருமாதம் தங்கியிருந்து பயிற்சி முடிந்த பின்பு திரும்புவர்.
இதற்காக வழக்கம் போல் கடந்த மார்ச் 15ம் தேதி வாக்கில் இங்கிருந்து 7 கைதிகள் பயிற்சிக்காக சென்னை புழலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு பயிற்சி முடிந்து திரும்புகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் திரும்ப முடியவில்லை. பின்பு லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் நேற்று முன்தினம் 7 பேரும் பாளை சிறைக்குத் திரும்பினர். அவர்களை சிறை வளாகத்தில் மருத்துவக்குழு சோதனை செய்ததில் 38, மற்றும் 40 வயதுடைய இரண்டு ஆயுள் தண்டனை கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர்கள் பாளை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
தவிர கைதிகளின் பாதுகாப்பிற்காக உடன் சென்று வந்த 5 பேருக்கு தொற்றில்லா விட்டாலும் அவர்கள் வளாகத்தில் தனிமைப் படுத்தப்பட்டனர். இதையடுத்து பாளை சிறையின் கைதிகள் மற்றும் சிறை வார்டன்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதோடு பாளை சிறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.