ஐ.பி.எல். போட்டியை நிறுத்தக்கோரிய போராட்டம் வலுப்பெற்றதாக காவிரி உரிமை மீட்பு குழு தெரிவித்துள்ளது.
IPL போட்டியை நிறுத்தக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் முதல் குரலை எழுப்பின. பிறகு அது தமிழக மக்களின் குரலாக எதிரொலித்தது. அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் காவிரி உரிமை மீட்பு குழுவின் தலைமையில் இணைந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு நுழைவது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே திரைப்பட கலைஞர்கள், படைப்பாளிகள் இணைந்து "தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' என்ற பெயரில் ஒருங்கிணைந்து, இதே கோரிக்கையை முன்னெடுத்தன. இச்சூழலில் சீமான், தமிமுன் அன்சாரி, தனியரசு, இயக்குனர் கெளதமன் ஆகியோர் இரு குழுக்களிலும் தமிழ் உணர்வாளர்கள் நிரம்பியிருப்பதால், ஒன்றாக இணைந்தே போராடுவது என்று ஆலோசித்து அவசரமாக முடிவெடுக்கப்பட்டது.
உடனடியாக பாரதிராஜா அலுவலகத்தில் எல்லோரும் கூடினர். யாரும் கட்சிக் கொடிகளை ஏந்தி வராமல், வில், அம்பு, புலி பொறித்த தமிழ் கொடியை மட்டுமே ஏந்துவது என்றும், இரு அமைப்புகளும் இணைந்து போராடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதில் பாரதிராஜா, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, காவிரி மீட்பு குழு தலைவர் பெ.மணியரசன், தனியரசு எம்எல்ஏ, தங்கர்பச்சன், இயக்குனர் அமீர், இயக்குனர் V.சேகர், இயக்குனர் கெளதமன், இயக்குனர் வெற்றி மாறன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கு சீமான், கருணாஸ், அன்புமணி ராமதாஸ், விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், அய்யாகன்னு உள்ளிட்டோர் அலைபேசி வழியாக ஆதரவு கொடுத்தனர்.
இன்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றி வளைப்பது என்றும், ஏப்ரல் 12 அன்று கிண்டியில் பிரதமர் மோடிக்கு எதிராக இதே போல் இணைந்து கறுப்புக் கொடி காட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒத்துழையாமை இயக்கம், காவிரி உரிமை மீட்பு குழு தெரிவித்துள்ளது.