![Corona for 20 schoolgirls in Tanjore ... Holiday announcement for school!](http://image.nakkheeran.in/cdn/farfuture/jeIRrE8vl2W6L9S8oYPLW7KUPIbR2XzIcvezjJUptrU/1615689137/sites/default/files/inline-images/ytuiytuyt.jpg)
தஞ்சாவூர் அருகே 20 பள்ளி மாணவிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 16 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாணவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல், ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்த பொழுது மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 11ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது அந்த பள்ளிக்கு இரண்டு வாரகாலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.