சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை நேற்று இரவு (25-12-24) போலீசார் கைது செய்தனர் .
போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன்(37), கோட்டூர்புரம் மண்டபம் பகுதியில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், பிரியாணி கடையில் விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், தான் அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கிறது. இந்த நிலையில், தான் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரி, அவர் எங்கே வசிக்கிறார்?, எந்த துறையில் படித்து வருகிறார்?, எந்த நபருடன் தனியாக அமர்ந்திருந்தார்? என்பது குறித்த பல்வேறு விவரங்களுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.