
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கல், தோண்டி எடுப்பதற்காக கடந்த 1982ஆம் ஆண்டு வாக்கில் ஆனந்தவாடி கிராமத்தில் சுமார் 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தியது அரசு. அப்போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2,500 ரூபாய் நஷ்ட ஈடாகவும், நிலம் கொடுத்த விவசாயிகளின் வீட்டில் உள்ள ஒருவருக்கு சிமெண்ட் ஆலையில் நிரந்தர வேலை கொடுப்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால், 37 ஆண்டுகள் ஆகியும் அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிபடி வேலை கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, காற்றில் பறக்கவிட்டனர் எனக் கூறி நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் அந்தக் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கடும் போராட்டத்தில் இறங்கினர். அப்போது அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அந்த பேச்சுவார்த்தையின்போது நிரந்தரப் பணி வழங்க முடியாது. ஆனால், நிலம் கொடுத்த 57 குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணி வழங்கப்படும் என்று கூறி, அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களாக பணி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளியூர்களில் இருந்து 40 பேர்களை நிரந்தர தொழிலாளர்களாக வேலைக்காக ஆட்களை எடுத்துள்ளனர். ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர பணி இல்லை. வெளியில் இருந்து குறுக்கு வழியில் நிரந்தர வேலைக்கு ஆட்களை அனுப்புவது ஏன், ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பதா என்று கோபமடைந்த ஆனந்தவாடி விவசாய மக்கள் கடந்த 30ஆம் தேதி தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் திரைப்பட இயக்குனர் கௌதமன் தலைமையில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அங்குள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தரமான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்தனர். இதையடுத்து அரியலூர் காவல்துறை ஏ.டி.எஸ்.பி. திருமேனி, தலைமையில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. தேவராஜ் உட்பட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். அப்போது ஏ.டி.எஸ்.பி. திருமேனி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை ஆகியோர் போராட்டத்திற்கு தலைமையேற்ற இயக்குனர் கௌதமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார். தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் கவனத்திற்கு போராட்டம் குறித்து அதிகாரிகள் தகவல் அளித்தனர். உடனே அமைச்சர் சம்பத், செல்ஃபோன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சர் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.