Skip to main content

கோவிலில் வடகலை, தென்கலை மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார்! -செயல் அலுவலருக்கு உத்தரவு!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூஜையின் போது வடகலை, தென்கலை பிரிவினர் மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

வைணவ திருத்தலங்களில் வடகலை அல்லது தென்கலை பிரிவினர் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்துவருகிறது. இருதரப்பினர் மத்தியில் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

 

high court



இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராகவும், வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை அர்ச்சகர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதாகவும், இதனால் கோவில் விழாக்கள் பூஜைகள் சுமுகமாக நடைபெறுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 

ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1915 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் தென்கலை பிரிவினர் முதலில் பிரபந்தம் பாடவும் மத்திரங்களை பூஜை செய்யவும் அதன் பிறகு வடகலை பரிவினர் பிரபந்தம் பாடவும் செய்ய வேண்டும் எனப் பிறப்பித்த உத்தரவுகளை உரிய முறையில் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
 

1915 -ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் வடகலை பரிவினர் பிரபந்தம் பாடுவதை தென்கலை பிரிவினர் தடுக்கக் கூடாது எனவும் வழிபாட்டுக்கு மட்டுமே மத்திரங்கள் ஓதப்படுவதாகவும்   தெரிவிக்கப்பட்டது.


 

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடகலை, தென்கலை பிரச்சனை நீண்டநாள் பிரச்சனையாக இருப்பதால்  கோவில் விழாக்கள் மற்றும் பூஜைகளை சுமுகமாக நடத்த முடிவதில்லை என்று தெரிவித்தார். 
 

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், நீண்ட நாள்களாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறேன். வரதராஜ பெருமாள் கோயில் செயல் அதிகாரி முதலில் தென்கலை பிரிவினரை ஸ்ரீசைல தயா பத்ரம் முதல் இரண்டு வரிகளைப் பாடவேண்டும். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீராமானுக தயாபத்ரம் முதல் இரண்டு வரிகளைப் பாடவேண்டும். பின்னர் இரண்டு பிரிவினரும் சேர்ந்து பாட வேண்டும். பிரபந்தம் பாடிய பிறகு மனவாள மாமுனிகள் வாலித்திருநாமம், பின்னர் தேசிகன் வாலி திருநாமம் பாடி முடிக்க வேண்டும்.
 

உயர்நீதிமன்ற உத்தரவை தென்கலை, வடகலை பிரிவினர் மதித்து செயல்படவில்லை அல்லது பிரபந்தம் பாடவில்லை என்றால். யார் முன் வந்து பிரபந்தம் பாட முன் வருபவர்களை செயல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.
 

விழா காலங்களில் வடகலை, தென்கலை பிரிவினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், செயல் அலுவலர் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அந்தப்புகாரை பெற்று குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை  அமல்படுத்தவில்லை என்றால் செயல் அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடும். அல்லது இந்த உத்தரவை செயல்படுத்தாத நபர்களுக்கு எதிராக வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1 -ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்