"எனக்கு இந்த கலர் பிடிக்கலை" என வெறுப்பை உமிழ்ந்து 50- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பையே துண்டித்துள்ளார் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கருவியபட்டி கிராமம். சுமார் 50- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்திற்கு, குடிநீர் தேவைக்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியினரால் தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது இத்தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இவ்வேளையில், சமீபத்தில் நடைப்பெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம் பாலசுப்பிரமணியம் என்பவர் ஊராட்சிமன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கிராம மக்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை என்று கருதி மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்பை திடீரென துண்டித்தார். இதற்குக் காரணமாக, "எனக்கு இந்த கலர் பிடிக்கலை.! வேற கலர மாத்துங்க. மீண்டும் கனெக்சன் தருகின்றேன்." என வெறுப்பாக பதிலளிக்க, ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.
அங்கு அவர் இல்லாததால் சாக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் சரண்யாவிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்பை துண்டித்ததார் என்பதால், ஊராட்சி மன்றத்தலைவருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தாலும் ஆச்சரியமில்லை." என்பதால் இங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.