
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பு ‘பாரதிய பாஷா பரிஷத்’ ஆகும். இந்த அமைப்பு இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘பாரதிய பாஷா’ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த விருது இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த விருது கடந்த 1975ஆம் ஆண்டு சீதாராம் சேக்சாரியா மற்றும் பாகீரத் எச் கனோடியா ஆகியோரால் நிறுவப்பட்டது. மேலும் இந்த விருது ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு பத்திரங்களை உள்ளடக்கியது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருதை தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் மே மாதம் 1ஆம் தேதி (01.05.2025) அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்டுகள். சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்திய அகாதெமி, இயல், கலைஞர் பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் ஆகும். இவர் கடந்த 30 ஆண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, திரைத்துறை, ஊடகம் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாதமி விருதையும் இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.