Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

Pensioners at Annamalai University protest for the second day!

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சிபிஎம்,  அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழக அயர்ப்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்களை உடனடியாக பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த வேண்டும்,  பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை தணிக்கை தடை மற்றும் நிதி பற்றாக்குறையை காரணமாக காட்டி நிறுத்தி வைத்துள்ளதை ரத்து செய்து உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்கும் வகையில் காத்திருப்பு போராட்டம் புதன் கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் இரவு பகல் பாராமல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கி வருகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில் வியாழக்கிழமை 2-வது நாளாக தொடர்ந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில்  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சங்கமேஸ்வரன், நகர் குழு உறுப்பினர்கள் சதீஷ், ராகுல் உள்ளிட்ட கட்சியினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட பொதுச்செயலாளர் இளமுருகன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்ட களத்தில்  துணையாக இருப்போம் என ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் போராட்ட களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஏப் 11-ந்தேதி தலைமை செயலகத்திற்கு சென்று கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  இதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தேதி குறித்து கூறுங்கள் அப்போது தான் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொள்வோம் என்றனர்.  பின்னர் இது குறித்து அரசின் உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்யப்படும் என்று பதிவாளர் கூறி சென்றுவிட்டார். 

பல்கலைக்கழக வளாகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. அனைவரும் ஓய்வூதியர்கள் என்பதால் வெய்யில் மற்றும் இரவு நேரத்தில் பல்கலைக்கழக வட்டாரம் பரபரப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்