சேலம் மத்திய சிறையில் கைதிகளின் பணம் ரூ.8.77 லட்சத்தை கையாடல் செய்த புகாரின்பேரில் சிறைத்துறை ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் மத்திய சிறையில் 830-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் கொடுக்கும் பணம், அந்தந்த கைதிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தப் பணத்தைக்கொண்டு, சிறைச்சாலை கேண்டீனில் கைதிகள் தங்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள், சில உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் வழங்கிய தொகையில், பெருமளவு முறைகேடு நடந்திருப்பதாக சிறைத்துறை நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதுமட்டுமின்றி, கைதிகளின் சமையலுக்காக வாங்கிய மளிகைப் பொருள்களுக்காக கொடுத்த காசோலையும் போதிய பணமின்றி திரும்பி வந்துவிட்டது. அரசு நிர்வாகம் வழங்கிய காசோலையே திரும்பி வந்ததால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சிறைத்துறை தணிக்கை அதிகாரிகள் சேலம் மத்திய சிறையில் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கான வரவு, செலவுகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள் கொடுத்த தொகையில் ரூ.8.77 லட்சம் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கணக்குவழக்குகளைக் கவனித்து வந்த ஊழியர் வெற்றிவேல் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம், ஊழியர் வெற்றிவேல் கடந்த 20 நாள்களாக வேலைக்கு வரவில்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு எந்த முன் தகவலும் சொல்லப்படாததும் தெரிய வந்தது.
வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கூடுதல் எஸ்பி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.