சேலம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர் சடலம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில், சேலம் - விருத்தாசலம் ரயில் மார்க்கத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பது குறித்து பொதுமக்கள் வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடம் விரைந்த வாழப்பாடி காவல்துறையினர், இதுகுறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபரின் சடலம் அருகே ஒரு அடையாள அட்டை கிடந்தது. அதில், வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிழக்கு சாலையைச் சேர்ந்த அசோகன் மகன் குகன்ராஜ் (20) என்று இருந்தது. ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ., (மெக்கானிக்) படித்து வந்திருப்பதும் தெரியவந்தது.

இது ஒருபுறம் இருக்க, பிப்ரவரி 7ம் தேதி இரவு, வாழப்பாடி காவல்நிலையத்தில் அசோகன் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கல்லூரிக்குச் சென்ற தன் மகன் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறியிருந்தார். புகார் அளித்த அசோகனின் மகன்தான் குகன்ராஜ் என்பதை அறிய காவல்துறையினர், அசோகனுக்கு தகவல் அளித்து சடலத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர். அசோகன், சடலத்தைப் பார்த்து மகனே என்று கதறி அழுதார்.
இதுகுறித்து குகன்ராஜின் உறவினர்கள் கூறுகையில், ''குகன்ராஜை யாரோ திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசியெறிந்துள்ளனர். அவன் நல்ல பையன். யாருடைய வம்புதும்புக்கும் போக மாட்டான். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்,'' என்றனர்.
காதல் விவகாரத்தில் குகன்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் சிக்கி, அவரே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குகன்ராஜ் கல்லூரிக்கு வழக்கமாக தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். கல்லூரி முடிந்து அதே பேருந்தில் வீடு திரும்பும் அவர், பிப்ரவரி 7ம் தேதியன்று மாலை வழக்கமாக இறங்கும் சிங்கிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் வாழப்பாடிக்குச் சென்று இறங்கியிருப்பது தெரிய வந்தது. வழக்கமான நிறுத்தத்தில் இறங்காதது குறித்து நண்பர்கள் கேட்டதற்கு, தன்னுடைய புத்தக பை கிழிந்து இருப்பதாகவும், அதை வாழப்பாடிக்குச் சென்று தைத்துவிட்டு வருவதாகவும் கூறியதாகவும் குகன்ராஜின் நண்பர்கள் கூறுகின்றனர்.
தலை வேறு, முண்டம் வேறாக வாலிபர் சடலம் கிடந்த சம்பவம் சிங்கிபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.