தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த 35 வயதான இளைஞர் மணிகண்டன். இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 21ஆம் தேதி இலங்கையிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டனை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜவுளி வியாபாரியான மணிகண்டனோ சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தவர் திடீரென்று அவர் தனது ஆடைகளை கலைத்து விட்டு தெருவில் நிர்வாணமாக ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார்கள். அப்போது அவர் அங்கு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 90 வயதான நாச்சியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தை பிடித்து கடிக்க தொடங்கினார். இதில் வலி தாங்க முடியாமல் நாச்சியம்மாள் அய்யோ... அம்மா...என்று கத்த தொடங்கினார். அதைக்கண்டு அங்கு வந்த உறவினர்கள் நாச்சியம்மாளின் கழுத்தை கடித்தபடி இருந்த மணிகண்டனை தள்ளி விட்டுவிட்டு அவரை காப்பாற்றினர்.
இருப்பினும் நாச்சியம்மாள் கழுத்திலிருந்த ரத்தம் அதிகமாக கொட்ட தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து, உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் நாச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுசம்பந்தமாக போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஜவுளி வியாபாரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட மணிகண்டன் மனநிலை பாதிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இப்படி கரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாலிபர் அப் பகுதியில் உட்கார்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.