
கன்னியாகுமரியில் ஜீப் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை சாலையில் பொலிரோ ஜீப் வாகனம் ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் ஒன்றரை மணி அளவில் அந்த காரானது கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் பாய்ந்தது. இதில் சாமியார்மடம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் இயக்கி வந்த இருசக்கர வாகனத்தில் கார் மோதியது. இதில் மாணவன் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த எபினேசர் என்பவர் படுகாயம் அடைந்தார்.
கல்லூரி மாணவனும் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்தில் சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.