கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக நாடு முழுக்க ரயில் போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. ரயில் சேவை இல்லாததால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தொடர்ந்து தமிழகத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் நான்கு வழித்தடங்களில் மட்டும் முதற்கட்டமாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி ஈரோடு வழியாக தினமும் கோவை - காட்பாடி ,காட்பாடி -கோவைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும், கோவை மயிலாடுதுறை ,மயிலாடுதுறை கோவைக்கு ஜன சதாப்தி ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரயில்வே நிர்வாகம், "இரண்டாவது கட்டமாக வரும் 12ஆம் தேதி முதல் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கும், கோவையிலிருந்து அரக்கோணத்திற்கும் தினந்தோறும் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டு, அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கும், அதேபோல் கோவைலில் இருந்தும் இயக்கப்பட உள்ளது. அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டு ஈரோட்டிற்கு மதியம் 12. 07 மணிக்கு வந்து பிறகு புறப்பட்டுச் செல்லும்.
அதே போல் கோவையிலிருந்து மதியம் 3.15 புறப்பட்டு ஈரோடுக்கு மாலை 4.47 மணிக்கு வந்து, 4.50 சேலம் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில்களில் செல்வதற்கான பயண டிக்கெட்டுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது எனத் தெரிவித்துள்ளது. தினந்தோறும் கோவையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தொழில் நிமித்தமாக திருப்பூர், ஈரோடு, சேலம், என பயணம் நடந்து கொண்டே இருக்கும் சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு ரயில் பயணம் மெல்ல மெல்ல தொடங்குவது தமிழகத்தின் இயல்பு நிலையை ஏற்படுத்த உதவுகிறது.