'உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவுத்துறையில் பொறுப்புகள் வழங்க ஏற்பாடு செய்கிறேன்' என தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்தங்கியிருக்கும் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆக்குவேன் எனக் கூறியுள்ளார். எம்எல்ஏ, எம்.பி தேர்தலில் வென்றால் மட்டுமே போதாது. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு திமுகவினர் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். எத்தனை மனவருத்தங்கள், வேறுபாடுகள் இருந்தாலும்கூட நிர்வாகிகள் ஒன்றாகப் பாடுபட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவுத்துறையில் பொறுப்புகள் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.
தேனி மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். பிற கட்சியினர் டெபாசிட் கூட வாங்கக் கூடாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போடி தொகுதி திமுகவிற்கு கிடைக்கவில்லை. அந்த வெற்றி உண்மையானது அல்ல. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரனும் நானும் கல்லூரி நண்பர்கள். அவர் பெரிய பேச்சாளர் மற்றும் வாலிபால் பிளேயர், நான் பேஸ்கட்பால் பிளேயர். இதனால் நாங்கள் கல்லூரி வகுப்புக்குச் சரியாகச் செல்லமாட்டோம். அதனாலேயே அரசியலுக்கு வந்து விட்டோம். எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி திமுகதான். இன்று தொண்டர்கள் சுறுசுறுப்பில் தேனி மாவட்டத்தை மிஞ்சுவதற்கு எந்த மாவட்டமும் இல்லை.100 சதவீத வெற்றியினை பெற வேண்டும்'' என்று கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ் செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.