மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான வழக்கில், கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த 17 பேர் பலியாகினர். டிசம்பர் 2- ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 3- ஆம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நேர்ந்ததாகவும், எந்த உள்நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று (18.12.2019) விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சுவர் தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக தேசிய பட்டியலினத்தவர் நல ஆணையம் விசாரித்து வருவதாகவும், மற்ற இடங்களில் 5 அடி சுவராக உள்ள நிலையில் ஒரு பகுதி சுவர் மட்டும் 20 அடியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 5 அடியாக இருந்த சுவர் அனுமதி பெறாமல் 21 அடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளதாலும். ஜாமீன் தரக்கூடாது எனக் கூறி, வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.