தமிழகம் முழுவதும் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இனி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாரந்தோறும் மிகப்பெரிய அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை தமிழக மருத்துவத்துறை நடத்தி வந்தது. தொடக்கத்தில் வாரம் ஒரு முறையும், பின்னர் இரு முறையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் மட்டும் 4 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, கரோனாவின் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில், வாரந்தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள மருத்துவத்துறை, தேவைப்படும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசிகளை வழக்கம் போல் செலுத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவத்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 49.03 லட்சம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1.37 கோடி பேர் செலுத்திக் கொள்ளவில்லை. அதேநேரத்தில் 3,292 கிராம பஞ்சாயத்துக்கள், 121 நகராட்சிகளில் 100% கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.