
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது ஆங்கியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி புனிதவதி, அழகப்பன் என்பவரது மனைவி வேம்பாயி ஆகிய இருவரும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று உழைத்து சம்பாதித்துக் கொண்டுவந்து குடும்பத்திற்கு உதவி செய்துவரும் பெண்கள். இவர்கள் வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியதும், சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு படுத்து வழக்கம்போல அசந்து தூங்கியுள்ளனர். ஏழைகள் என்பதால் அவர்கள் வீடும் தகுந்த பாதுகாப்பு இல்லாத அளவில் இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று நடு இரவில் புனிதவதி வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், ஒரு பவுன் தாலியுடன் கூடிய அவரது தாலிக்கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றுள்ளான். அதேபோன்று அன்றிரவே வேம்பாயி வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம மனிதன், அவர் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் சேர்க்கப்பட்டிருந்த சுமார் ஒரு பவுன் தாலியையும் அறுத்துக்கொண்டு சென்றுள்ளான். காலையில் எழுந்ததும் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட இரு பெண்கள் குனியும்போது தங்கள் கழுத்தில் தொங்க வேண்டிய தாலிக்கயிறு இல்லாமல் இருப்பதைக் கண்டு இருவரும் திடுக்கிட்டனர். இதுகுறித்து தங்கள் கணவரிடம் முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களின் தாலியை அறுத்துச் சென்ற திருடர்களைக் கைது செய்யுமாறு புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், தாலி திருடர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மதியழகன் ஆகிய இருவரையும் போலீசார் ரகசிய விசாரணை மூலம் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும்போது இருவரும் அறிமுகமாகி, வெளியில் வந்ததும் நண்பர்களாக இணைந்து தாலியறுக்கும் திருட்டுத் தொழிலை செய்துவந்துள்ளனர்.