மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, "தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்றுப் பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய எந்தத் திட்டங்கள் இருந்தாலும் ஆதரிப்போம். தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். வேளாண் மசோதாவை மு.க.ஸ்டாலின் எதற்காக எதிர்க்கிறார் என்றே புரியவில்லை.
விவசாயம் குறித்து விவரம் தெரியாததால் வேளாண் மசோதாவை எதிர்த்துப் பேசுகிறார் ஸ்டாலின். நான் ஒரு விவசாயி என்பதால் வேளாண் விவரங்கள் குறித்து எனக்கு நனறாகத் தெரியும். கொள்முதல் செய்பவர்கள் விவசாய நிலத்தில் எந்த உரிமையும் கொண்டாட முடியாது.
வேளாண் மசோதா குறித்து எதிர்க்கட்சியினர் தவறான புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். வேளாண் விளை பொருட்களின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மசோதா உதவும். என்னுடைய விளைபொருட்களை நான் பஞ்சாப் மாநிலத்தில் விற்றால் 8.5% கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் 8.5% வரி செலுத்த வேண்டும் என்பதைப் பின்பற்றச் சொல்கிறாரா ஸ்டாலின்? விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் வகையில் வேளாண் மசோதா இருந்ததால் அ.தி.மு.க ஆதரவு அளித்தது.
மு.க.ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார் என நினைக்கிறேன்; நாங்கள் மக்களைப் பார்க்கிறோம். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை யாராவது மிரட்ட முடியுமா? மிரட்டலுக்குப் பயப்படுபவர்களா அவர்கள்? ஒவ்வொரு மாவட்டத்தையும் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள்; அனைத்தையும் அறிவிக்க முடியுமா?" இவ்வாறு முதல்வர் பேசினார்.