/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3473_0.jpg)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் பெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பங்கேற்றார். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கியது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் விளக்கி இருக்கிறது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக குடியரசுத் தலைவரை அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)