கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றும், நேற்று முன்தினமும் (05, 06.11.2024) கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், ‘மக்கள் பணியே இலட்சியம்! மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்’ என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுகவினருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “திராவிட மாடல் அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து அறியும் நோக்கத்தில், முதல் கட்டமாகக் கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் கள ஆய்வை மேற்கொண்டேன். கோவையில் திமுகவினரின், குழந்தைகளுடன் தாய்மார்கள், பொதுமக்கள் அனைவரும் வந்து மலர்ந்த முகத்துடன் அளித்த வரவேற்பில் மகிழ்ந்தேன். எல்காட் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன். தமிழ்நாடு வீட்டு வசதித் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில் அதற்கான ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கினேன். கோவை குறிச்சியில் நகை உற்பத்தி தொழிலாளர்களுக்கான தொழில் வளாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டேன்.
கோவையில் பெரியார் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்தேன். கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திமுக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைத் தந்ததை உணர முடிந்தது. கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் திமுகவினரின் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரியக் காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!” எனத் தெரிவித்துள்ளார்.