மனைவி கண் முன்னே தன்னை ‘அங்கிள்’ என்று கூறியதால் ஜவுளிக்கடைக்காரரை வாடிக்கையாளர் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஜட்கேடி பகுதியில் விஷால் சாஸ்திரி என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு, கடந்த 2ஆம் தேதி ரோஹித் என்பவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு புடவை வாங்குவதற்காக, விஷாலின் கடைக்கு வந்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும், தம்பதி எந்த புடவையையும் தேர்ந்தெடுக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து விஷால், ரோஹித்திடம் ‘என்ன விலையில் புடவைகளை வாங்க விரும்புகிறீர்கள்’ என்று கேட்டதற்கு அவர் ரூ.1000 என்று ரோஹித் பதிலளித்து அதைவிட விலை உயர்ந்த புடவையாக இருந்தால் கூட வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.
அப்போது விஷால், ‘அங்கிள், வேறு வகையிலும் புடவையைக் காட்டுகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதில் கோபமடைந்த ரோஹித், விஷாலிடம் அங்கிள் என்று அழைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் ரோஹித்தை விஷால், ‘அங்கிள்’ என்று அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித், விஷாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ரோஹித் தனது மனைவியை அழைத்து கடையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். சிறுதி நேரம் கழித்து ரோஹித், சில நபர்களை அழைத்து வந்து மீண்டும் விஷாலின் கடைக்கு வந்துள்ளார். ரோஹித்தும் அவர் அழைத்து வந்த நபர்களும் கடையில் இருந்த விஷாலை, தரதரவென கடைக்கு வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பெல்ட்டை வைத்தும் விஷாலை கடுமையாக தாக்கிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விஷால் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ரோஹித் மீது அந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி கண் முன்னே தன்னை அங்கிள் என்று அழைத்ததால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.