முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (27.08.2024) இரவு 9 மணியளவில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், மத்திய அரசு “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் மூலமாகத் தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய 573 கோடி ரூபாய் இன்றைக்கு ஒதுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ளாததால் இந்த நிலை என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மாநில அரசு எப்படி இந்த விஷயத்தை எதிர்கொள்ளயிருக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்கவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து நேரடியாகவும் சொல்லியிருக்கிறார்கள். நானும் இன்றைக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘அமெரிக்கா சென்று வந்தபிறகு அமைச்சரவையில் ஏதாவது மாற்றம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு, “ மாறுதல் ஒன்றுதான் மாறாதது. வெயிட் அண்ட் சி (Wait and see) எனப் பதிலளித்தார். மேலும், “அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்த் விவகாரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ’ என்ற கேள்விக்கு, “அவர்கள் இரண்டு பேரும் நீண்டகால நண்பர்கள். அவரும் சொல்லிவிட்டார். இவரும் சொல்லிவிட்டார். அதை நீங்கள் அவர் சொன்னதுபோல, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நீங்கள் பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதைத்தான் அவர் சொன்னதுபோல நான் திருப்பிச் சொல்கிறேன்.
இதனையடுத்து, ‘மத்திய அரசுடன் திடீர் என்று இணக்கமான உறவைக் கடைப்பிடிப்பீர்களா? மத்திய அமைச்சர்கள் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு வந்தது தொடர்பாக...’ என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதல்வர், “என்ன இணக்கமான நிலை. அது உங்களுடைய எண்ணம். நாணய வெளியிடுவது மத்திய அரசின் பொறுப்பு. அவர்களின் அனுமதியோடுதான் வெளியிடப்படுகிறது. அதனால் அந்த மரியாதை அடிப்படையில், அந்த முறைப்படி அவர்களை அழைத்தோம். வந்தார்கள். நாணயத்தை வெளியிட்டுச் சென்றார்கள்” எனப் பதிலளித்தார்.