
தமிழகம் முழுவதும் காவிரி ஆணையம் அமைக்க வெற்றி விழா என்று அதிமுக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு திமுகவை சாடி வருகின்றனர்.
அதேநேரத்தில், தங்களை அறியாமல் போகிற போக்கில் தங்கள் கட்சியையும் குறை சொல்லி வருகின்றனர். அண்மையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திருடி டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களும் கொடுத்து வருகிறார் என அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நான் அப்படி பேசவே இல்லை.. நான் என்ன பேசினேன் என்றால் புரட்சி தலைவி அம்மா புகழை வைத்து 30வருடங்களுக்கு மேலாக உடனிருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் புரட்சித் தலைவி அம்மாவிற்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேனே தவிர புரட்சி தலைவி அம்மாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் நான் பேசவில்லை என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு கட்டப்பட்டு வரும் நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது வழக்கம் போல திமுகவை சாடிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் முதலமைச்சராக இருந்த இந்திராகாந்திக்கு அஞ்சி திமுக தலைவர் இரு அவைகளுக்கும் தெரியாமல் போய் வழக்கை வாபஸ் வாங்கி வந்துவிட்டார் என்று பேசினார்.
’முதலமைச்சர் இந்திராகாந்தி’ என்பதை மட்டும் இருமுறை அழுத்தமாக சொன்னதால் அருகில் இருந்தவர்களும், எதிரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும்.. ஆமா, இந்திராகாந்தி எந்த மாநிலத்தில், எப்ப முதல்வராக இருந்தார்? அவர் பிரதமராக தானே இருந்தார் என்று பேசிக் கொண்டனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அமைச்சர்கள் பலரும் உளறலாக பேசுவதும், பிறகு மறுப்பு தெரிவிப்பதும் வழக்கமாகிவிட்டது என்கின்றனர் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத பொதுமக்கள்.