புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஹைட்ரோ கார்ப்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்த தகவல் வெளியானது. இந்த தகவலையடுத்து அடுத்த நாள் முதல் நெடுவாசல் கிராம விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார்கள். அடுத்தடுத்த நாட்களில் நெடுவாசலை சுற்றியுள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல நல்லாண்டார் கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களிலும் போராட்டம் வெடித்தது. நெடுவாசல் போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறை, சமூகநல அமைப்புகள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என்ற பல தரப்பினரும் ஆதரவு கொடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அதன் பிறகு மே முதல் நாள் மற்றும் ஆகஸ்ட் 15 தேதிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பல போராட்டங்கள் நடந்தாலும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மரம் தங்க. கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே அந்த தீர்மானம் என்ன நிலையில் உள்ளது என்று பொது தகவல் அலுவலர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கேட்டிருந்தார். அதற்கு நேற்று அவருக்கு பதில் வந்துள்ளது. அந்த பதில் கடிதத்தில் மாவட்ட பொது தகவல் அலுவலர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊராட்சிகள் உதவி இயக்குநர் பதில் அளிக்க கேட்டிருந்தார். தொடர்ந்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர் பதில் கொடுத்துள்ளார். அதில் 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கொடுத்துள்ளார்.
மேலும் அரசுக்கு என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது? அதன் நகல்கள் வேண்டும் என்ற கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்று பதில் அனுப்பியுள்ளனர். இது குறித்து விவசாயி கண்ணன் கூறும் போது.. மாவட்ட தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டால் ஒன்றிய அதிகாரிக்கு அனுப்பி இருக்கிறார். ஒன்றிய அதிகாரி மாவட்ட அதிகாரியிடம் பதில் கேட்க சொல்கிறார். இனி யாரிடம் போய் தகவல் கேட்பது. நிறைவேற்றப்பட்ட கிராம சபை தீர்மானங்களே என்ன நிலையில் உள்ளது என்பது பற்றி தெரியவில்லை. மறுபடியும் தீர்மானம் நிறைவேற்றினாலும் இப்படித் தான் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்றார்.