Skip to main content

தினகரன் கூடாரத்தில் வெடித்தது மோதல்!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

டிடிவி தினகரனுக்கு ஆதரவளிக்கக் கூடிய 18 எம்எல்ஏக்களில் ஐந்து பேர் சசிகலாவை பெங்களூர் சிறையில் நாளை சந்திக்கின்றனர். அதற்காக பெங்களூருக்கு செல்லும் வழியில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன், அருர் முருகன், பெரியகுளம் கதிர்காமு, சாத்தூர் சுப்பிரமணி, விருதாச்சலம் எம்எல்ஏவான கலைசெல்வன் மற்றும் ஒரு பெயர் தெரியாத எம்எல்ஏ  ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் அந்த விடுதியில் தங்கி இருக்கிறார்கள். 

 

 

ammk

 

இவர்களது கோரிக்கை என்னவென்றால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும் என்பதுதான். முதலில் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என தினகரன் சொன்னார். அதை முதலில் தங்கதமிழ்செல்வன் எதிர்த்தார். ஓபிஎஸ் எதிர்ப்பால் பெரியகுளத்தில் நுழையவே முடியவில்லை, நான் அவர்களை தோற்கடித்து விடுவேன் என தங்கத்தமிழ்ச்செல்வன் சொன்னார். அதன் பின்னர் முடிவு மாறியது.

 

 

 இப்போது தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கின்றனர். ஆனால் டிடிவி தினகரன் எதிர்த்து வழக்கு போட முடியாது தேர்தலை சந்திப்போம் என கூறி வருகிறார். அத்துடன் இப்பொழுது இதுவரை அமமுகவிற்கு செலவு செய்து வந்த செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றுவிட்டார். இனி எதிர்காலத்தில் கட்சி நடத்துவது எப்படி,  கட்சிக்காக ஒரு பைசா கூட செலவு செய்ய தினகரன் தயாராக இல்லை. அதே நேரத்தில் இளவரசியின் மகனான விவேக் கட்சிக்காக தினகரனுக்கு காசு கொடுக்க மறுத்து வருகிறார். எனவே கட்சி முழுக்க முழுக்க நெருக்கடியான நிலையில் உள்ளது. இந்த நிலையில் நாங்கள் உங்களை நம்பித்தான் வந்தோம். நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என சசிகலாவை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் திட்டமிட்டு பெங்களூருவுக்கு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பயணமாகியுள்ளார்.

 

 

ஏற்கனவே டிடிவி தினகரன் செயல்பாடுகளில் கோபம் கொண்டிருக்கும் சசிகலா, இந்த எம்எல்ஏக்களுக்கு என்ன கூறுவார், அங்கு என்ன நடக்கும், அவர்கள் சசிகலாவின் ஆலோசனையை கேட்பார்களா? மாட்டார்களா? என்பதை பொறுத்துதான் அமமுகவின் எதிர்காலம் இருக்கிறது. மொத்தத்தில் அமமுகவில் தினகரனின் ஆதரவு கூடாரம் என்பது நொருங்கிக் கொண்டிருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்