வேலூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரியில் பல விடுதிகள் இருப்பதை போல பெரிய பணக்காரர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு கெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன. அந்த வகையில் திமுக துரைமுருகன் எம்.எல்.ஏவுக்கும், ஏலகிரியில் ஒரு கெஸ்ட்ஹவுஸ் உள்ளது. ஓய்வு கிடைத்தால் அங்கு சென்று தங்குவார். அங்கு பலவிதமான மரங்கள் உள்ளன. அதில் வனத்துறை அனுமதி பெற்று சில சந்தன மரங்களை வளர்த்துவந்தார். அது பெரியதாக வளர்ந்து நிற்கிறது.
இந்நிலையில் மார்ச் 9ந்தேதி இரவு மர்மநபர்கள் அந்த பங்களாவுக்குள் புகுந்து இரண்டு சந்தன மரங்களை அறுத்து எடுத்துச்சென்றுள்ளனர். இது தொடர்பாக துரைமுருகன் வீட்டின் பாதுகாவலர், ஏலகிரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். முன்னால் அமைச்சரும், திமுக பிரமுகர் வீட்டில் இருந்து இரண்டு சந்தன மரங்கள் கொள்ளை போயிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கோட்டைக்குள், மாவட்ட ஆட்சியர் வீட்டில், மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சுற்றுலாமாளிகை மிக முக்கிய இடங்களில் கடந்த சில ஆண்டுகளில் சந்தனமரங்கள் கொள்ளைப்போனது, அதில் குற்றவாளிகளை போலிஸார், வனத்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.