திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி மற்றும் தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தண்டபாணி, தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பெத்தனசாமி, செயலாளர் தொழிலதிபர் ராகவன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், பள்ளி தாளாளர் ராகவன், செயலாளர் பெத்தனசாமி, ஆசிரியர் காசிராஜன், பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாகனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவிட்டு மாணவர்கள் மத்தியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''சின்னாளபட்டி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி அறிவை வளர்த்ததில் முதல் பங்கு வகிப்பது தேவாங்கர் பள்ளிகளே. நான் சிறுவனாக இருக்கும்போது இப்பள்ளியில் விளையாடுவதற்காக வந்துள்ளேன். இன்று இப்பள்ளி உயர் நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதை நிர்வாகித்த நிர்வாகிகளே. தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.எம்.டி.நாச்சியப்பன் தொடங்கி, டி.எஸ்.வி.வி. தியாகராஜன், ஸ்டார் பொம்மை யாசேகர், இராமநாதன் சன்ஸ் பாபு, தண்டபாணி, ஹேமலதா இன்று ராகவன் வரை அனைவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே. திராவிடத்தை வளர்த்ததில் சின்னாளபட்டி பெரும்பங்கு வகிக்கிறது. இப்பள்ளி கல்வியில் மட்டும் அல்ல விளையாட்டுத்துறையிலும் சிறந்த முறையில் உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு கடந்த 30 வருடங்களாக நான் உதவி செய்திருக்கிறேன் என்பதை மனமகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இங்கு பள்ளி படிப்பை முடித்தவுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பெறலாம். தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கி மாணவ மாணவிகளின் கல்வி நலனை காத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அவருக்கு ஒவ்வொரு மாணவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.