Skip to main content

கலைஞருக்கு இரங்கல் தெரிவித்த பெண் காவலர் இடமாற்றம்!

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
lady police


மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திருச்சி பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் செல்வராணி. இவர் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோவில் கவிதை பாடி, அதை சமூகவலைதளமான வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் இறுதியில், இது என் உணர்ச்சியின் வெளிப்பாடு, கலைஞர் ஒரு எழுத்தாளர், மாபெரும் கலைஞர், பத்திரிகையாளர், கவிதையாளர். நானும் ஒரு கவிஞர் என்ற முறையில் இது என் உணர்ச்சியின் வெளிப்பாடு, ஒரு தமிழச்சியின் வெளிப்பாடு தயவு செய்து இதை அரசியலாக்கிவிட வேண்டாம். அழுவதற்கு எனக்கும் உரிமை உண்டு, காவல்துறை என்பதால் கண்ணீர் வடிக்க எனக்கு உரிமை இல்லையா? எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், செல்வராணியை திருச்சி மாநகர காவல்துறையில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டதன் காரணமாகவே இவர் மாற்றப்பட்டார் என காவல்துறையினர் மத்தியில் பரவலாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்