திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரைச் சேர்ந்த இருபது வயதான இளைஞர் ஆண்டிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பனிரெண்டு வயதான சிறுமி சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) க்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். அதுவும் அந்த சிறுமி அதே ஊரில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்புதான் படித்து வருகிறார்.
இந்த விஷயம் திண்டுக்கல்லில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் காதுக்கு எட்டவே, உடனே சிலுவத்தூர் சென்று அந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதோடு அந்த பெற்றோர்களை எச்சரித்ததுடன் குழந்தைகள் நலக்குழுவினர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
அதே போல் வத்தலக்குண்டு அருகே உள்ள தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பதினைந்து வயதான சிறுமி ஈஸ்வரிக்கும் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. அந்த சிறுமி பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த விஷயமும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரியவே, உடனே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதோடு இப்படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என அந்த பொற்றோர்களை எச்சரித்தனர். மேலும் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி விட்டு சென்றனர். இப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.