தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவி சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் ஆண்டு தோறும் சாரல் விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான சாரல் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்தியது. 2019- ஆம் ஆண்டுக்கான சாரல் திருவிழா சனிக்கிழமை (30.11.2019) தொடங்கியது. முதல் நாளான நேற்று (30.11.2019) நடைபெற்ற சாரல் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வரவேற்றார். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசின் பல்துறை பணிகளை விளக்கும் கண்காட்சியை திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி சாரல் திருவிழாவில் உரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பாக 551 பயனாளிகளுக்கு ரூபாய் 3.81 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நான்கு கண்கள். ஆனால் பார்வை ஒன்று தான். அரசு மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரிகளை தொடர்ந்து தேனியில் கால்நடை மருத்துவக்கல்லூரி தேனியில் அமைய வேண்டும் என ஓபிஎஸ் முயற்சி எடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் தங்கதமிழ்செல்வன் விருது வாங்கியவர் ஓபிஎஸ் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தவறுதலாக பேசினார். அதை கேட்டு மேடையில் இருந்த ஓபிஎஸ் உள்பட அனைவருமே சிரித்தனர். பின் சுதாரித்துக் கொண்டு தங்கதமிழ்மகன் விருது பெற்றவர் ஓபிஎஸ். என கூறி விட்டு தங்கதமிழ்செல்வனும் நம்மவர் தான் பரவாயில்லை என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்து போய் உள்ளார் ஸ்டாலின், அதற்காகத் தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் முதல்வர், துணை முதல்வர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உறுதியில் உள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்" தான் என்று கூறினார்.