
தென்காசியில் இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்த பெண் குழந்தையை பெற்ற தாயே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்றவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மதுஷிகா என்ற குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. சிறுவயதிலிருந்தே மதுஷிகாவிற்கு சரியான உணவுகளை வழங்காமல் தாய் இசக்கியம்மாள் அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தன்று மகளை கொடூரமாக தாக்கியதாகவும் அதனால்தான் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் இசக்கியம்மாள் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் குழந்தைக்கு ஒரு வயதாவதற்கு முன்பே இசக்கியம்மாளின் கணவர் மாடசாமி இறந்துள்ளார். இதனால் இரண்டாவது திருமணத்திற்கு இசக்கியம்மாள் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் உறவினர்கள் குழந்தை இருப்பதை காரணம் காட்டி இரண்டாம் திருமணத்திற்கு தடை விதிப்பதாகவும் இதனால் ஆத்திரத்தில் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. தற்பொழுது கொடூர தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.