18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.