தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02/10/2021) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாப்பாபட்டி கிராமத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர், வழியில் கே.நாட்டப்பட்டி கிராமத்தில் காரை நிறுத்தச் சொல்லி, வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, பாப்பாபட்டியில் நடந்த கிராமம் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சருடன் அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடன் சேர்ந்து உறுதிமொழியை எடுத்துக் கொண்ட முதலமைச்சர், கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கிராம மக்கள் பாப்பாபட்டியைத் தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல், இந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப் பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடைக்கோடி மக்களின் குரலைக் கேட்கவே நான் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். உங்களால் போற்றப்படும் உதயச்சந்திரன் எனக்கு தனிச்செயலாளராக உள்ளார். வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வளர்ச்சியே அரசின் இலக்கு. மீதமிருக்கும் வாக்குறுதிகள் மட்டுமின்றி இன்னும் என்னென்ன தேவையோ அதையும் நிறைவேற்றுவோம்.
நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற கட்டடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடைக்குக் கட்டடம் கட்டித் தரப்படும். ரூபாய் 6 லட்சம் செலவில் கறையன்பட்டியில் கதிர் அடிக்கும் இயந்திரம் அமைக்கப்படும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பாப்பாபட்டியில் அமைக்கப்படும்.
பாப்பாபட்டி மக்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மரபின்படி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மறக்கமுடியாத நிகழ்வாக பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டம் அமைந்துள்ளது. பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது. கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை" என்று கூறினார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாகக் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.