கடந்த ஜூன் மாதம் காவிரி டெல்டா பகுதிகளுக்கான பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன்பின்னர் கல்லணை திறக்கப்பட்டு நீர் கீழணையை வந்தடைந்த பிறகு சென்னை நீர் தேவைக்காக வீராணம் ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் கடைமடை விவசாயப் பகுதிகளான சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதிகளின் பாசனத்திற்கு இன்னும் நீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் சிதம்பரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்டும், குடிமராமத்து பணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகி மூர்த்தி, விவசாயிகள் முகுந்தன், சித்தார்த்தன், மணிவண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் குடிமராமத்து பணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அனைவரும் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ்-ஐ சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவைப் பெற்ற செயற்பொறியாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.