சென்னை உள்ளிட்ட பல நகர, கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடி நீர் செல்கிறது, ஆனால் கொள்ளிடம் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கோ தண்ணீர் கிடைக்காமல், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணையில் துவங்கி கிழக்கே காட்டூர் பகுதியில் உள்ள வங்காளவிரிகுடா கடலில் களக்கிறது கொள்ளிடம் ஆறு. அதன் இரு கரையோரம் ஆயிறக்கணக்கான கிரமங்கள் இருக்கின்றன. அம்மக்களுக்கு 15 அடியிலேயே குடிதண்ணீர் கிடைத்துவந்தன. ஆனால் கூட்டுக்குடிநீர் திட்டம், மணல்கொள்ளை என பல்வேறு திட்டங்களால் அவர்களின் நிலத்தடி நீராதாரம் படுபாதாலத்திற்கு சென்றுவிட்டது. எந்த காலத்திலும் தண்ணீர் பஞ்சம் வந்திடாத கொள்ளிடக்கரையோர மக்கள் தற்போது தண்ணீருக்கு போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆலங்குடி, கோதண்டபுறம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், பழையார், தர்காஷ், கூழையாரு, கேவாரோடை, கொட்டாய்மேடு, கிழவாடி, ஆலங்குடி, அகரவட்டம், திருமுல்லைவாசல், வழுதலைகுடி, ராதாநல்லூர், சஞ்சீவிராயன்நல்லூர், உச்சிமேடு, முதலைமேடு, முதலைதிட்டு, ஆலாலசுந்தரம், வடபாதி, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது, நிலத்தடி நீர் மிகவும் படுபாதலத்தில் விட்டதாகவும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விட்டதாகவும் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதிமக்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து ஆச்சாள்புரத்தை சேர்ந்த சண்முகம் கூறுகையில், " கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது. திட்டங்கள் துவங்கும் போதே நாங்கள், எங்களின் நிலத்தடி நீராதாரம் படு பாதாளத்திற்கு போய்விடும் என எதிர்ப்பு தெரிவித்தோம், அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதோடு கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் அரசு மணல்குவாரிகள் மூலம் மணலை அள்ளிவிட்டது, எஞ்சிய பகுதிகளில் காவல்துறை, அதிகாரிகளின் துணையோடு மணலை கொள்ளையடித்துவருகின்றனர்.
கடந்த ஆண்டு மிகவும் சொற்ப அளவிலேயே மழை பொழிந்தது, நான்கு நாட்கள் பேய்த மழை தண்ணீரையும் பலத்த பாதுகாப்போடு கடலில் கலக்க செய்துவிட்டனர், இந்த ஆண்டு கோடை துவங்குவதற்குள்ளாகவே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கிவிட்டது. எஞ்சிய நாட்களில் என்ன நடக்குமோ என்கிற அச்சம் துவங்கிவிட்டது.கொள்ளிட கரையோர கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வேண்டும்."என்கிறார்.
மேலும் அதே பகுதியை சேர்ந்தவர்கள், "அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து தொட்டியில் தேக்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட முறையும் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டனர். குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழையாறு புதுப்பட்டின உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் 5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படியும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்." என்கிறார்கள்.