டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார். விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வரவேற்பு கொடுத்தனர்.
அங்கிருந்த கிளம்பிய முதல்வர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். முதல்வர் வருகையை பார்த்த மாநகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள் பதற்றமானதோடு மாநகராட்சி அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது. உள்ளே நுழைந்த அவர், மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் முடிவடைந்த சில மணித்துளிகளில் அங்கு உள்ள கோப்புகளைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வுக்கு பிறகு, 'மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்...' என டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் கொக்கேரி அருகே உள்ள பீமனோடையை 4.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.